மாவட்ட மைய நூலகத்தில் பார்வைகுன்றியவர்களுக்காக “தமிழின் சிறந்த நூறு நாவல்கள்” ஒலி புத்தக வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பார்வைகுன்றியவர்களுக்கு கணினி மற்றும் பல்வேறு உபகரணங்கள் மூலம் ஒலி புத்தகங்கள் மின் புத்தகங்கள் பயன்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாசிப்போம் (பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இணைய நூலகம்) மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சார்பாக 13.10.2019 அன்று சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த “தமிழின் சிறந்த நூறு நாவல்கள்” மின்புத்தகமாகவும் ஒலி புத்தகமாகவும் “வாசிப்போம் இணைய நூலகம்” என்ற அமைப்பு உருமாற்றியுள்ளது. மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் அவர்கள் ஒலி புத்தக குறுந்தகட்டினை வெளியிட “ஜெகஜ்ஜோதி” பார்வையற்றோருக்கான தன்னார்வள வாசிப்பாளர் வட்டம் நிர்வாகி பிரபா வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். “வாசிப்போம் இணைய நூலகம்” அமைப்பின் நிறுவனர் எஸ்.இரவிகுமார் இந்நிகழ்ச்சியில் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பார்வைகுன்றியவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன் பெற்றனர்.